ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

நன்றி இறைவா நன்றி


மண்ணின் மடி மீது
கண்ணின் மணி மீது – எம்மை
காத்து வரும் இறைவா
நன்றி இறைவா நன்றி

நானாக வந்து பிறக்கவில்லை
தானாக எதுவும் நடக்கவில்லை – நான்
தேடாத சுகங்களெல்லாம் – என்னை
தேடி வர படைத்துள்ளாய்
கதிரவன் ஒளிதனை
காற்றின் சுகங்களையும்
கார் மேக மழைதனையும்
கடலின் அருட்கொடையையும்
கடலின் அடக்கத்தையும்  – எம்மை
காக்க வல்லவா படைத்துள்ளாய் .
நன்றி இறைவா நன்றி
கண் உறங்க இரவினையும்
கணக்கு சொல்லும் வளர்பிறையையும்
கண்டு களிக்க விண்மீனையும்
காக்க வல்லவா படைத்துள்ளாய்
நன்றி இறைவா நன்றி
உழுது விதைக்க நிலங்களையும் – அங்கு
ஓடிப்பாயும் நதிகளையும்
உழைத்து பிழைக்க உடல் நலத்தையும்
ருசித்து புசிக்க நல்ல உணவினையும் – நங்கள்
ஊக்கம் பெறவே தந்துள்ளாய்
நன்றி இறைவா நன்றி
தாயிடம் பொருமைதனையும் – அவள்
தந்து வரும் பால் அமுதையும்
தந்தையிடம் பாசத்தையும் – அவர்
தந்து வரும் பொறுப்புணர்வையும் – எம்மை
காப்பதற்காகவே தந்துள்ளாய்
நன்றி இறைவா நன்றி
சமைத்த நிலையில் பழங்களையும்
சமைக்கின்ற நிலையில் நெல்மணிகளையும்
குடிக்கின்ற நிலையில் இளநீரையும்
கடித்து சுவைக்கின்ற நிலையில் கரும்பினையும்
சுவைக்கின்ற நிலையில் தென் அமுதையும் – எங்கள்
தேவைக்கேற்றவாறு படைத்துள்ளாய்
நன்றி இறைவா நன்றி
கால்நடைகளிடம் பணிவை தந்தாய் – அதில்
கறந்து குடிக்க பால் வளம் தந்தாய்
விரைந்து செல்ல குதிரையையும் – பாலைவனம்
கடந்து செல்ல ஒட்டகத்தையும்  - வானம்
பறந்து செல்ல விஞ்ஞான அறிவையும் தந்தாய்
நன்றி இறைவா நன்றி
இன்பம் அறிய இளமையை தந்தாய்
இளமை இளைப்பாற இல்லறத்தைத்தந்தாய்
இல்லறத்தின் பரிசாக மக்களைத்தந்தாய்
மக்களின் வளர்ச்சியில் மகிழ்ச்சியை தந்தாய்
நன்றி இறைவா நன்றி
நானே விளைவிக்காத தானியங்களையும்
நானே நெய்விக்காத ஆடைகளையும் – என்
பிறப்பிற்கு முன்னே சேகரித்து வைத்தாய் – நான்
பிறந்த பின்னே எனக்கு கிடைக்க வைத்தாய்
நன்றி இறைவா நன்றி
நிலத்தடி நீரை நாங்கள் குடிக்கின்ற
      ஆழத்தில் ஓட வைத்தாய்
மணக்கின்ற வாசம் தந்து அங்கு இருக்கின்ற
பொருளை உணர வைத்தாய்
 நன்றி இறைவா நன்றி
நோயை தீர்க்கும் மருந்துகளை
      தாவரங்களில் சேர்த்து வைத்தாய்
தாவரங்களை படைத்த பின்பே - இத்
      தரணியில் எங்களை நீ படைத்தாய்
நன்றி இறைவா நன்றி
மண்ணுலக வாழ்வின் முறைகளையும்
மறுமை வாழ்க்கை உயர்வுகளையும் – எங்கள்
மாநபி [ஸல்] வாழ்வினில் அறிய வைத்தாய்
மாபெரும் குராஆனை ஓத வைத்தாய் – இம்
மனித வாழ்விற்கே உயர்வளித்தாய் .


1 கருத்து: